உடைந்தது கூட்டணி!இடைவேளையா?
இறுதிக்கட்டமா?

உடைந்தது கூட்டணி!இடைவேளையா? இறுதிக்கட்டமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையை ஏற்ற பின்னர் தொடங்கிய அதிமுக-பாஜக உறவு, முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்தபோது தமிழக அரசியல் அரங்கில் புருவம் உயர்த்தாதோர் யாரும் இல்லை.

தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்தே அதிரடியாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஊழல் தொடர்பாக ஜெயலலிதாவை விமர்சித்து பேட்டியளித்தபோதே அதிமுக தலைவர்கள் கண்டித்தனர். அண்ணாமலையை மாற்றிடுமாறு டெல்லி பாஜக தலைமைக்கு கோரிக்கை அவர்கள் சார்பில் தனிப்பட்ட சந்திப்புகளில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

அதன் பின்னர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கியபோது அன்றாடம் தன் பேச்சில் மாற்றுக் கட்சியினரை வறுத்தெடுத்தார். இதனால் அரசியல்களமே கொந்தளிப்பாக இருந்தது. அவர் என்ன  சொன்னாலும் கண்டுகொள்ளாமல் விடுவது என திமுக முடிவெடுத்துவிட்ட நிலையில் கூட்டணிக் கட்சியினரான அதிமுகவினர் கையைப் பிசைந்துகொண்டு இருந்தனர்.

இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக விவரித்தார். பரபரப்பாக விவாதிக்கப்பட்ட அதன் சாரம் வருமாறு:

‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு தமிழ் மாநாடு பத்து நாள்கள் நடைபெற்றது. நான்காவது நாள் கூட்டத்தில் பி.டி.ராஜன் பேசுகிறார். நிகழ்வின் அழைப்பிதழில் பெயரே இல்லாத அண்ணாதுரையை அவர் அழைத்துக்கொண்டு போகிறார். அப்போது மணிமேகலை என்ற பெண், சங்க இலக்கியப் பாடல் ஒன்றைப் பாடுகிறார். உடனே மைக் எடுத்த அண்ணாதுரை, ‘இந்த பெண் நன்றாகப் பாடியது. இதுவே கற்காலமாக இருந்திருந்தால் உமையவள் அவளின் பாலைக் குடித்துதான் இந்தப் பெண் பாட்டுப் பாடியதாக கட்டுக்கதை விட்டிருப்பார்கள். நல்ல வேளை பகுத்தறிவு வந்துவிட்டது; மக்கள் இதையெல்லாம் நம்பமாட்டார்கள்' என்றார்.

அதையடுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அங்கு பேசுகையில், ‘சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் யார் உமையவள் பற்றி தவறாகப் பேசியது' என்று கேட்கிறார். எல்லோரும் பம்முகிறார்கள். அண்ணாதுரையை மதுரைக்குள் ஒளித்துவைத்து விடுகிறார்கள். அவரால் வெளியே போக முடியவில்லை. அப்போது முத்துராமலிங்கத் தேவர் சொல்கிறார், ‘கடவுளை மறுப்பவர்கள் கடவுளைப் பற்றிப் பேசினால், மதுரை மீனாட்சிக்கு இனி ரத்தத்தில்தான் அபிஷேகம் நடக்கும்' என்றார். மன்னிப்புக் கேட்டுவிட்டு பி.டி.ராஜனும் அண்ணாவும் ஓடிவந்தார்கள்,' இவ்வாறு அண்ணாமலை பேசியிருந்தார்.

இனி பொறுப்பதில்லை என்று அதிமுக முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலை அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். ஆனால் மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கத்தை அவர் கைவிடவேண்டும்,' என்றார்.

“உலக அளவில் சிறந்த தலைவரான அண்ணாவையே கொச்சைப்படுத்தும்வகையில் நடக்காத சம்பவத்தைப் பேசியுள்ளார். முத்துராமலிங்கத் தேவரும் அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள். அண்ணாமலை எந்தப் புத்தகத்தில் படித்தார்? என்ன படித்தார்? திடீரென அண்ணாவைப் பற்றி தவறான கருத்தைக் கூறினால் அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளாது. அண்ணாமலைக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும்,' என்றும் ஜெயக்குமார் கூறினார்.

இந்த கண்டனத்தை ஜெயக்குமார் வெளியிடுவதற்கு முந்தைய நாள் டெல்லிக்கு தனியாகச் சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அப்போது அமித் ஷா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக அளவிலான இடங்களை கூட்டணியில் கேட்டதாகவும் அதில் அதிமுகவுக்கு ஒப்புதல் இல்லை எனவும் தகவல்கள் சூசகமாக வெளியாகி இருந்தன.

இந்த சந்திப்புக்கும் அண்ணாமலை மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஜெயக்குமார் சொன்னதற்கும் முடிச்சுப் போடலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் இதைத் தொடர்ந்து அதிமுக பாஜக இடையே மோதல் அதிகரித்துப்போனது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அண்ணாமலையை விமர்சிக்க, அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுக்க, ஒரு கட்டத்தில் ஏகப்பட்ட மோதல்கள். பாஜகவுக்கு பதிலடி கொடுக்க கூட்டணியில் இருந்து வெளியேறியே தீரவேண்டும் என்று அதிமுக தலைவர்கள்  தரப்பில் எடப்பாடிக்கு கடும் அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ‘அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை' என்பதை கட்சியின் கருத்தாகக் கூறினார். இது குறித்தும் இரு கட்சிகளுக்கு இடையே எந்த பிரச்னையும் இல்லை என அண்ணாமலை கூறினாரே தவிர அண்ணா பற்றிய பேச்சுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அண்ணா மன்னிப்புக் கேட்டதாக எந்த தகவலும் 1956 இந்து ஏட்டில் பதிவாகவில்லை என்று அப்பத்திரிகை செய்தி வெளியிட்டதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

 அ.தி.மு.க. தலைமை எனும் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பா.ஜ.க. கூட்டணி பற்றி நிர்வாகிகள் கருத்துதெரிவிக்க வேண்டாம் என்று லேசாக சமாதானக் கொடி பறக்கவிடப்பட்டது. பாஜக டெல்லி தலைமையும் அண்ணாமலையிடம் அதிமுகவை அதிகம் விமர்சிக்காமல் போகவேண்டும் என கூறியதாகவும் தகவல்கள் வந்தன. அவரை அடியொற்றிப் பேசிய பிற பாஜக தலைவர்களும் வாயை மூடிக்கொண்டனர்.

ஆனால் அதிமுகவின் சுயமரியாதை இந்த இடத்தில் விழித்துக்கொண்டது. இங்கிருந்து கொச்சி சென்று டெல்லி சென்ற அதிமுக தலைவர்கள் குழு அமித் ஷாவை சந்திக்க முயன்றது. அவர் நேரம் அளிக்கவில்லை. அதே சமயம் அவர் கர்நாடகாவிலிருந்து சந்திக்க வந்திருந்த ஜனதா தளம் (எஸ்) குழுவினரை சந்தித்துப் பேசியதும் நடந்தது. அமைச்சர் பியூஷ்கோயல் மூலமாக பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் சந்திப்பு நடத்தியது. ‘அண்ணாவை விமர்சித்த பாஜக தலைவரை மாற்றுங்கள். எங்களால் கட்சி நடத்துவது மிகச் சிரமம் ஆகிவிடும்' என்று அவர்கள் கூறியதாக சொல்லப்பட்டது.

பாஜக தலைமை சில மாதங்கள் போகட்டும் செய்கிறோம் எனச் சொன்னதாக முதலில் ஒரு தகவல் பரவியது. ஆனால் உடனடியாகச் செய்தால்தான் தங்களுக்கு மரியாதை இருக்கும் என அதிமுக எதிர்பார்த்தது. கோவையைச் சேர்ந்த ஒரு பாஜக பிரமுகர்தான் நட்டாவுடன் நடந்த இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

பாஜக இந்த விவகாரத்தில் நழுவும் மீனாக இருப்பதை உணர்ந்த  அதிமுக, தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த 25 ஆம் தேதி அறிவித்தது.

பாஜக தங்களுடன் இருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறமுடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக தரப்புக்கு இருக்கும் எதிர்ப்பு உணர்வும் தங்கள் மேல் திரும்பிவிடுகிறது என்பதை நன்கு உணர்ந்தே எடப்பாடி இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஒருவிதத்தில் இது அண்ணாமலைக்குக் கிடைத்த வெற்றி என்றும்சொல்லலாம். இந்த ஆண்டு தொடக் கத்திலேயே அதிமுகவுடன் பாஜக தேசிய தலைமை கூட்டணியைத் தொடர்ந்தால் தன்னுடைய தலைவர் பதவியை துறக்கப் போவதாக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் சொன்னதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் அதிமுக மீதான மறைமுக மற்றும் நேரடி விமர்சனங்களை அவர் முன்வைத்து வந்தார். அதுவே வெளிப்படையான மோதலாக மாறி, இப்போது கூட்டணி உடையும் அளவுக்குச் சென்றுள்ளது. ஆகவே அண்ணாமலை வெற்றி பெற்றுவிட்டார் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். இது டெல்லி தலைமையின் ஆசி இன்றி நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்ற கருத்தும் உள்ளது.

தற்போது அவர் என் மண் என் மக்கள் யாத்திரையை நடத்திவருகிறார். அதனால் பாஜகவுக்கு என்ன ஆதரவு கூடியிருக்கிறது என்பதை வரும் நாடாளுமன்றத் தேர்தலே தீர்மானிக்கும்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக இருக்கும் புதிய கூட்டணி, பாஜக உள்பட்ட பிற கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய மும்முனைப் போட்டி தீவிரமாக இருக்கும். இப்போது தேஜ கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சில அங்கிருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்புகள்  உள்ளன. அதே சமயம் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள், அதிருப்தியால் அதிமுக கூட்டணிக்குப் போகலாம் என்ற யூகங்கள் களை கட்டி வருகின்றன.

2019ஆம் ஆண்டுதேர்தலுக்குப் பின்னால் பாஜககூட்டணியில் இருந்து அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா (தாக்கரே) ஆகிய கட்சிகள் விலகின. அதில் அதிமுகவும் சேர்ந்துள்ளது.

தமிழக பாஜக பொறுப்பாளரான சிடி ரவி அதிமுக விலகல் பற்றிக்கூறிய கருத்தில் ‘தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. அதற்குள் எதுவும் நடக்கலாம்' என்று கூறியிருப்பதும் கவனத்துக்கு உரியது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com